

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டைபகுதியை சேர்ந்தவர் ரமணராவ் (56). இவர் கடந்த 4-ம் தேதி எழும்பூர், பாந்தியன் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு இன்னொரு பைக்கில் வந்த 2 நபர்கள் ரமணராவை தாக்கி, அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து எழும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் மூலம் துப்பு துலக்கப்பட்டது. இதில், ரமணராவிடம் வழிப்பறியில் ஈடுபட்டது மந்தைவெளி, சாலையார் தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (20), அவரது கூட்டாளி திருவான்மியூர், பெரியார் நகர் நிதிஷ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் சென்னையில் எழும்பூர், வேப்பேரி, திருவல்லிக்கேணி, அண்ணாசதுக்கம், கே.கே.நகர், அசோக் நகர், வடக்கு கடற்கரை, திருவான்மியூர், சாஸ்திரிநகர், வேளச்சேரி உட்பட அடுத்தடுத்து 15 பேரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.