

மதுரை: மதுரை மாநகராட்சி புறநகர் வார்டுகளில் தெரு விளக்குகள் எரியாததால் இரவில் நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் நகை பறிப்பில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
மதுரை புதூர் பெட்ரோல் பங்க் முதல் அய்யர் பங்களா செல்லும் சாலையில் பெரும்பாலான தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து மோட்டார் சைக்கிளில் வரும் கொள்ளையர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
மதுரை மகாலட்சுமி நகரில் உள்ள இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ள மின் கம்பம் சாய்ந்து விழும்நிலை உள்ளது. இதனால் தெரு விளக்கு எரியவில்லை. அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த சென்ற சூசை என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 9 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பறித்துச் சென்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன் இதேபோல் கேவிஆர் நகரில் ராஜேஷ்வரி என்பவரிடம் ஒன்றரை பவுன் நகையை பறித்துச் சென்றனர். மெயின் ரோட்டில் ஆட்களை நிறுத்திவிட்டு, நடந்து சென்று பெண்களிடம் வழிப்பறி செய்துவிட்டு பைக்குகளில் ஏறி தப்பிச் செல்வதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
புறநகர் பகுதிகளில் போலீஸார் ரோந்து செல்வதே இல்லை. இது பைக் கொள்ளையர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. போலீஸார் குறைந்தபட்சம் இரவில் ரோந்து சென்றால் மட்டுமே வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.