செல்போன் வியாபாரியிடம் என்ஐஏ அதிகாரிகள் என கூறி ரூ.2 கோடி பறித்த வழக்கு - சரணடைந்த பாஜக பிரமுகர் உட்பட 6 பேருக்கு 6 நாள் போலீஸ் காவல்

செல்போன் வியாபாரியிடம் என்ஐஏ அதிகாரிகள் என கூறி ரூ.2 கோடி பறித்த வழக்கு - சரணடைந்த பாஜக பிரமுகர் உட்பட 6 பேருக்கு 6 நாள் போலீஸ் காவல்
Updated on
1 min read

சென்னை: செல்போன் வியாபாரி வீடு புகுந்து என்ஐஏ அதிகாரிகள் எனக் கூறி ரூ.2.3கோடியை பறித்துச் சென்ற விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைந்த பாஜக பிரமுகர் உள்பட 6 பேருக்கு 6 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அப்துல்லா (36), மாலிக் (34),செல்லா (35), சித்திக் (35). இவர்கள் கூட்டாக சென்னை மண்ணடி மலையப்பன் தெருவில் வீடு எடுத்து தங்கி பர்மாபஜாரில் செல்போன் கடை வைத்துள்ளனர். மொத்தமாக செல்போனை வாங்கி விற்பனையும் செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் மண்ணடியில் உள்ள அப்துல்லா வீட்டுக்குவந்த 7 பேர் கொண்ட கும்பல் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என்றுஅறிமுகப்படுத்திக் கொண்டு வீட்டிலிருந்த ரூ.2.3 கோடியை பறித்துக்கொண்டு தப்பியது. நீண்ட நேரத்துக்குபின்னரே வந்தவர்கள் என்ஐஏ அதிகாரிகள் இல்லை என்பது தெரியவந்தது.

புகாரின்பேரில் முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் எனக்கூறி பணம் பறித்துச் சென்ற வழக்கு தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன்நீதிமன்றத்தில் மண்ணடியை சேர்ந்தபாஜக மத்திய சென்னை பிரமுகர் வேலு என்ற வேங்கை அமரன், அவரதுகூட்டாளிகள் ரவி, விஜயகுமார், தேவராஜ், புஷ்பராஜ், கார்த்திக் ஆகிய5 பேருடன் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சரணடைந்த 6 பேரையும் 14 நாள்காவலில் வைத்து விசாரிக்க போலீஸார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்றுநடைபெற்றது. அப்போது, 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சரணடைந்த பாஜக பிரமுகர் உட்பட 6 பேரையும் 6 நாள் காவலில் விசாரிக்கபோலீஸாருக்கு அனுமதி வழங்கினார்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது பைசல் (36) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடு புகுந்து பறித்துச் சென்ற பணத்தை 7 பேரும் பிரித்துக்கொண்டார்களாம். இதுவரை ரொக்கமாக ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணம் அனைத்தையும் பறிமுதல் செய்து விடுவோம் என போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in