

சென்னை: சென்னையில் சினிமா பாணியில் கண்களை கட்டி, காவலர்கள் நகைகளை மீட்ட சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறி உள்ளது.
சென்னை எழும்பூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக உஷா என்பவர் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு உஷா பணிமுடித்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஓய்வறையில் படுத்து உறங்கி விட்டு காலையில் கண்விழித்து பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து எழும்பூர் போலீஸார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அன்றைய தினம் இரவு வெளியாட்கள் யாரும் உள்ளே நுழையவில்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாக சுகாதார நிலைய ஊழியர்களில் யாரோ ஒருவர் இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து ஊழியர்களிடம் இருந்து திருடிய நகையை மீட்க போலீஸார் நூதன வழி ஒன்றை கையாண்டனர். இதன்படி அங்குள்ள ஒரு அறையை காண்பித்து அந்த அறையில் மருத்துவமனை ஊழியர்கள் 11 பேரின் கண்களை கட்டி, நகையை எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அந்த அறையில் உள்ள பையில் திருடிய தங்க செயினை போட்டுவிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டோம், நகையை திருப்பி வைக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
பின்னர் காலை காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஊழியர்கள் அனைவரும் கண்கள் கட்டப்பட்டு அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். 11 பேரும் சென்று வந்த பின்பு சிறிது நேரம் கழித்து காவல் அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை செய்த போது அந்த பையில் ஐந்து சவரன் தங்க தாலி இருந்தது தெரியவந்தது. பின்னர் நகையை உஷாவிடம் போலீஸார் திருப்பி கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து உஷா கண்கலங்கி காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். சினிமா பாணியில் போலீஸார் நகையை மீட்ட சம்பவம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.