

கோவை: கஞ்சா கடத்திய வழக்குகளில் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை போதைப் பொருள் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலைய கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போதைப் பொருள் நுண்ணறிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, 2017 டிசம்பர் 14-ம் தேதி அங்கு போலீஸார் சோதனை மேற்கொண்டபோது, கையில் வெள்ளை பிளாஸ்டிக் சாக்கு பையுடன் ஒருவர் நின்றிருந்தார்.
அவரை பிடித்து விசாரித்ததில், கோவை கரும்புக்கடை, சாரமேடு திப்புநகர் பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (36) என்பதும், சாக்கு பையில் 16 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கோவை ஒருங் கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப்பொருள் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பளித்தார். அதில், ஷாஜகானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் உத்தண்டிபாளையம், அரிஜன காலனியைச் சேர்ந்த குமரவேல் (44), ஈரோடு-கரூர் சாலையில் உத்தண்டிபாளையம் பிரிவு அருகே 2018 அக்டோபர் 31-ம் தேதி கஞ்சா விற்பனை செய்ய முயன்றபோது மலையம் பாளையம் போலீஸாரிடம் பிடிபட்டார்.
அவரிடமிருந்து 1.20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எஸ்.ரவி, குமரவேலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞர் வெ.சிவக்குமார் ஆஜரானார்.