வேப்பூர் அருகே அனுமதியின்றி 68 பனை மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: திமுக பிரமுகர் தலைமறைவு
விருத்தாசலம்: தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களை பாதுகாக்கும் வகையில், கடந்த 2021-22-ம்ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை வாசித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பனை மரங்களை வெட்ட தடை விதித்து,
மிக அவசியான தேவை எனில் ஆட்சியரிடம் உரிய அனுமதிபெற்ற பின்னரே பனைமரங்கள் வெட்ட வேண்டும் என சட்டப் பேரவையில் அறிவித்தார். இதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூரில், சேலம் சாலைப் பகுதியில் வளர்ந்திருந்த சுமார் 68 பனை மரங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு வெட்டிச் சாய்க்கப்பட்ட தகவல் வேப்பூர் வட்டாட்சியர் மோகனுக்கு கிடைத்தது.
இதையடுத்து அவர் அங்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தார். மரங்களை வெட்டியவர்கள்மீது காவல்துறையில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வேப்பூர் காவல் நிலையத்தில் வட்டாட்சியர் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பொக்லைன் இயந்திரம் திமுக பிரமுகரான மணி சேகர் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவல கத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக வட்டாட்சியர் மோகனி டம் கேட்டபோது, “வேப்பூரைச் சேர்ந்த ஒருவரின் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவர் மீது புகார் அளித்திருக்கிறோம். தப்பியோடி யுள்ள நபரை போலீஸார் தேடி வருகின்றனர்” என்றார்.
