சேலம் - கோவை புறவழிச்சாலையில் கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து: அண்ணன், தங்கை உயிரிழப்பு
ஈரோடு: சேலம் - கோவை புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், அண்ணன், தங்கை உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் நசியனூர் கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்து (58). திருமணமான இவர், நசியனூர் மாரியம்மன், மதுர காளியம்மன், கருப்பராயன், கன்னிமார் கோயில்களில் பூஜை செய்து வந்தார். இவரது தங்கை புஷ்பா (49).
நசியனூர் மேற்குப் புதூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூஜை செய்து விட்டு, நேற்று காலை, புஷ்பாவுடன் இரு சக்கர வாகனத்தில் முத்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சேலம் - கோவை புறவழிச்சாலை, சாமிகவுண்டன்பாளையத்தில் சாலையைக் கடந்தபோது, சேலத்தில் இருந்து கோவையை நோக்கி வந்த கார் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து சித்தோடு போலீஸார் வழக்குப் பதிந்து, ஆத்தூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சற்குணத்திடம் விசாரித்து வருகின்றனர்.
