சென்னை | லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கத்தி முனையில் மாணவரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது

சென்னை | லிப்ட் கேட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கத்தி முனையில் மாணவரிடம் வழிப்பறி செய்த 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: கல்லூரி மாணவனுடன் வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்று, அவரிடமே வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை, பெரம்பூர், ஹைதர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (21). கல்லூரி மாணவரான இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, கடந்த17-ம் தேதி இரவு தேவாலயம் சென்று மறுநாள் அதிகாலை 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அதே பகுதி ஜமாலியா லிங்க் ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது இளைஞர்கள் இருவர் லிப்ட் கேட்டனர். இரக்கப்பட்ட ஆகாஷ், தனதுஇருசக்கர வாகனத்தில் இருவரையும் ஏற்றிக் கொண்டார். சிறிது தூரம் சென்றதும், 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி மிரட்டி, ஆகாஷை இருசக்கர வாகனத்தை நிறுத்தச் சொல்லிஅவரது செல்போன், கைக்கடிகாரம் மற்றும் மணிபர்ஸ் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

ஆகாஷ் இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில் ஆகாஷிடம் வழிப்பறி செய்தது அயனாவரம் ஏகாங்கிபுரத்தைச் சேர்ந்த பிரசாத் குமார் (22), அவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த தருண் (19) என்பது தெரிந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in