

விருதுநகர்: ஸ்மார்ட் காவலன் செயலி மூலம் காவலர்களைக் கண்காணிக்கும் இ-பீட் முறை விருதுநகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு காவல் துறையில் ஸ்மார்ட் காவலன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காவலர்களின் பணி குறித்த விவரங்கள், தகவல்கள் காவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுகின்றன. இந்நிலையில், காவலர்களின் பணியைக் கண்காணிக்கும் வகையிலும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் வகையிலும், குற்றங்கள் நடந்தால் அந்த இடத்துக்கு விரைவாக காவலர்களை அனுப்பி வைக்க ஏதுவாகவும் இ-பீட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் தேசபந்து திடலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் இ-பீட் முறையை அறிமுகம் செய்து வைத்தார். அதோடு இ-பீட் மூலம் குறிப்பிட்ட பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், காவலர்களின் ரோந்துப் பணியையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனோகர் கூறியதாவது: ஸ்மாட் காவலன் செயலி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் தற்போது இ-பீட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யார் எந்த இடத்தில், எந்த பணியில் உள்ளார் என்பதையும், ஒரு சம்பவம் நடைபெற்றால் அந்த இடத்துக்கு அருகே பணியில் உள்ள காவலரைத் தொடர்பு கொண்டு உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்புவதை உறுதிப் படுத்த முடியும். அதோடு பணியிடத்தைவிட்டுச் செல்லும் காவலர்களையும் இதன் மூலம் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.
விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக விருதுநகர் மேற்கு, பஜார், கிழக்கு, ராஜபாளையம் தெற்கு, ராஜபாளையம் வடக்கு, சிவகாசி நகர், சிவகாசி கிழக்கு, திருத்தங்கல், அருப்புக்கோட்டை நகர், சாத்தூர் நகர், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட 17 பீட்களில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.