Published : 19 Dec 2022 04:07 AM
Last Updated : 19 Dec 2022 04:07 AM
கோவை: இரண்டு நாய்குட்டிகளை கார் ஏற்றி கொன்றவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவை ரத்தினபுரி இச்சிப்பட்டி காலனி 9-வது தெருவில் வசிப்பவர் பிரபு. இவர் நேற்று முன்தினம் காலை தெருவில் நின்ற மூன்று மாதங்களேயான இரண்டு நாய் குட்டிகளை கார் ஏற்றி கொன்றுவிட்டதாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள் சேரன்மாநகரில் உள்ள தி பிளனடிக் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆஸ்ட்லின் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் பிரபு மீது போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தி பிளனடிக் அறக்கட்டளை செயலாளர் கணேசன் கூறும்போது, “சம்பவத்தை நேரில் பார்த்த இரண்டு பெண்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். இச்செயலில் ஈடுபட்ட நபர் வேண்டுமென்றே காரை பின்நோக்கி எடுக்கும்போது மிகவும் வேகமாக இயக்கியதாகவும் நாய்குட்டிகள் அடிபட்டுள்ளது குறித்து அருகில் இருந்தவர்கள் தெரிவித்தபோதும் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும் கூறினர்.
இரண்டு நாய் குட்டிகள் நசுங்கி இறந்த நிலையில், ஒரு நாய்குட்டியும், அதன் தாயும் தப்பித்துவிட்டன. தெரு நாய்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றன. இருப்பினும் வேண்டுமென்றே அவற்றை கொல்ல நினைப்பது குற்றம். எனவே, முறைப்படி காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT