Published : 19 Dec 2022 04:23 AM
Last Updated : 19 Dec 2022 04:23 AM

சீர்காழி பகுதியில் ஒரே நாளில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: 9 பேர் கைது

மயிலாடுதுறை: சீர்காழி பகுதியில் நேற்று ஒரே நாளில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக புகார்கள் வந்த நிலையில், எஸ்.பி என்.எஸ்.நிஷா உத்தரவின்பேரில், சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான போலீஸார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், 5 கிலோ கஞ்சா, ஒரு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிதம்பரத்தைச் சேர்ந்த ராஜா என்ற மனோஜ்(22), சாபிக் அலி(18), சீர்காழியைச் சேர்ந்த புத்தூர் வினோத்(20), தம்பி தேவேந்திரன்(24), ராஜா(37), வைத்தீஸ்வரன் கோவிலைச் சேர்ந்த ஆதிகேசவன்(21), அவினாஷ்(20) மற்றும் 2 சிறுவர்கள் என 9 பேரை கைது செய்தனர். இதையடுத்து, சீர்காழி காவல் நிலையத்துக்கு வந்த எஸ்.பி என்.எஸ்.நிஷா, தனிப் படையினருக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: போலீஸாரின் சோதனையில், மொத்தம் ரூ.12 லட்சம் மதிப்பிலான 5 கிலோ கஞ்சா, ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டு, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி மாவட்டம் முழுவதும் சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டதில், 1,500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிகழாண்டு, மாவட்டத்தில் 56 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 3,284 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,420 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 60 கஞ்சா வழக்குகளில் 72 பேர் கைது செய்யப்பட்டு, 39 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 32 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 384 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 334 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 60 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சிறப்பு சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இதற்கு பொதுமக்கள், காவல் துறையுடன் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கஞ்சா, குட்கா விற்பனை தொடர்பான தகவல்களை 9442626792 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் தங்கள் விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை. 04364- 211600 என்ற எஸ்.பி அலுவலக தொலைபேசி எண் மூலமும் தெரிவிக்கலாம். மயிலாடுதுறை மாவட்டம் போதைப் பொருட்கள் இல்லாத மாவட்டமாக இருக்க பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x