

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேயுள்ள சேந்தங்குடியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(38). இவர், மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும், பள்ளி மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு சீனிவாசன் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மாணவரின் தாய், இதுகுறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆசிரியர் சீனிவாசனை பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.
இந்நிலையில், ஆசிரியர் சீனிவாசன் டிச.16-ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, சிதம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர்.