Published : 18 Dec 2022 05:33 AM
Last Updated : 18 Dec 2022 05:33 AM
திருப்பூர்: திருப்பூர் வெங்கமேடு வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (70). இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன், மகள் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.
சுப்பிரமணி ஆத்துப்பாளையம் ஸ்ரீகன்னிமார் கருப்பராயன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தார். வழக்கம்போல இரவு நேரத்தில் கோயில் வளாகத்திலேயே சுப்பிரமணி உறங்கி உள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை கோயிலில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பக்திப் பாடங்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. சுப்பிரமணி மகள் கவுரி கோயிலுக்கு சென்றுள்ளார். கோயில் கதவு திறந்து கிடந்த நிலையில் உள்ளே இருந்த பொருட்கள், துணி உள்ளிட்டவை கலைந்து கிடந்தன. கர்ப்பகிரகத்தின் பின்பகுதியில் சுப்பிரமணி முழுமையாக எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
அனுப்பர்பாளையம் போலீஸார் சடலத்தை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
கோயில் பகுதியில் இரவு நேரங்களில் மது மற்றும் பிற போதைப் பொருட்களுக்கு அடிமையான பலர் சுற்றித் திரிவதால், அவர்களில் யாரேனும் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கல்லைப் போட்டு கொலை செய்து அதன் பின்னர் உடலை எரித்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சே.பிரபாகரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தனிப்படை போலீஸார் வழக்கை விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT