

சென்னை: ஜாமீனில் வெளிவந்து விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடி டொக்கன் ராஜாவை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற டொக்கன் ராஜா (44). இவர் மீது கொலை,கொள்ளை முயற்சி, ஆள்கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும்மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பி கேட்டகரி ரவுடியான இவர், தற்போது பாஜக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராக உள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் ஒரு குற்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த ராஜா, அதன்பிறகு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், துரைப்பாக்கத்தில் ராஜா பதுங்கி இருப்பதாக ரவுடிகள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரவுடிகள் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆணையர் மனோஜ், ஆய்வாளர் பூமாறன் தலைமையிலான போலீஸார் நேற்றுமுன்தினம் இரவு துரைப்பாக்கத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த டொக்கன் ராஜாவை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரை மயிலாப்பூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பிறகு டொக்கன் ராஜா நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள டொக்கன் ராஜா, பிரபல ரவுடி சிடி மணியின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.