

நாகப்பட்டினம்: பிரதாபராமபுரம் கிராமத்தில் தொடர் நிகழ்ந்து வரும் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என எஸ்.பி அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவராசு மற்றும் பொதுமக்கள், நாகை எஸ்.பி அலுவலகத்தில், எஸ்.பி ஜவஹரிடம் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
பிரதாபராமபுரத்தில் 4 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு கடந்த ஒரு வார காலமாக தனியாக வசிக்கும் பெண்களின் வீடுகளையும், ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளையும் குறிவைத்து கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இதேபோல, 100 நாள் வேலைக்குச் செல்லும் பெண்களிடம் பட்டப்பகலில் வழிப்பறி முயற்சியும் நிகழ்ந்து வருகிறது.
இதனால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் வசித்து வருகின்றனர். பதிவு எண் இல்லாத வாகனங்களில், ஆயுதங்களுடன் அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இது குறித்து கீழையூர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் அளித்துள்ளோம். ஆனாலும், இதுபோன்ற சம்பங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
எனவே, பிரதாபராமபுரம் கிராமத்தில் இரவு நேரங்களில் போலீஸாரின் ரோந்துப் பணியை அதிகரித்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து, கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.