

கரூர்: சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞர் மற்றும் அவரதுபெற்றோருக்கு தலா 20 ஆண்டுகள்சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கரூர் அருகேயுள்ள ஆத்தூர்பிரிவைச் சேர்ந்தவர் சரவணன் மகன் கவுசிக்குமார் என்ற கவுசிக்(20). கூலித் தொழிலாளியான இவர், 14 வயது சிறுமியை2021-ம் ஆண்டு செப்.29-ம் தேதிகடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
இதற்கு கவுசிக்குமாரின் தந்தை சரவணன், தாய் சுமதி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதுதொடர்பாக சிறுமியின் தாய், கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், விசாரணை நடத்திய போலீஸார் அக்.9-ம் தேதி கவுசிக்குமாரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து, சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தியபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.நசீமாபானு நேற்று தீர்ப்பளித்தார். அதில், கவுசிக்குமாருக்கு, சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.
மேலும், கவுசிக்குமாரின் பெற்றோருக்கு குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, போக்சோசட்டத்தின் கீழ் 2 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனைவிதித்தார். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.