

மதுரை: மதுரையில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாத பெண் வீட்டில் வைத்து ஊசிபோட்டு பணம் வசூலித்ததாக கைது செய்யப்பட்டார்.
மதுரை சம்பட்டிபுரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் காளிதாஸ். இவரது மனைவி யோக மீனாட்சி (37). 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத இவர், மதுரை துரைசாமி நகர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சில ஆண்டுகள் உதவியாளராக பணிபுரிந்தார்.
இந்த அனுபவத்தை பயன்படுத்திக்கொண்ட அவர், அப்பகுதியில் காய்ச்சல் போன்ற சில நோயால் பாதித்தவர்களுக்கு தனது வீட்டில் வைத்து ஊசி போட்டும், மருந்து மாத்திரைகளும் வழங்கியுள்ளார். ஊசி மட்டும் செலுத்தினால் ரூ. 20, மருந்துடன் ரூ. 50 என, மக்களிடம் பணம் வசூலித்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த நகர் சுகாதாரத்துறை சார்பில், எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் பூமிநாதன் வழக்கு பதிவு செய்து, யோகமீனாட்சியை கைது செய்தார்.