

கோவை: கோவை மாவட்டம் பசுமணி பழங்குடியினர் கிராமத்தில் விளை நிலங்களில் காய்கறிப் பயிர்களுடன் கஞ்சா செடி ஊடு பயிராக பயிரிட்டு வருவதாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில், டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் சம்பவ இடத்துக்கு வந்து கஞ்சா செடிகளை பார்வையிட்டு விசாரித்தார்.
மேற்கண்ட கிராமத்தைச் சேர்ந்த செல்லன்(60), பழனிசாமி(60), ராஜப்பன்(33), வேலுச்சாமி(26) ஆகியோர் ஊடுபயிராக கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. நால்வரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த 15.3 கிலோ எடை கொண்ட 300 கஞ்சா செடிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.