

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சைபர் கிரைம் குற்றத்தில் பல ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நபர்கள் ஈடுபடுகின்றனர்.
சைபர் கிரைம் குறித்தும், கல்லூரி மாணவ, மாணவிகள் எப்படி சமூக வலைதளங்களை கவனமாக கையாள வேண்டும், எந்த மாதிரியான தகவல்களை பரிமாறக்கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த சில நாட்களாக ஒரு பிரத்யேக செயலி மூலம் மோசடி செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்கில் தொடர்புடையவரை கைது செய்துள்ளோம். ஒரு மாதத்துக்கு 500 சைபர் கிரைம் புகார்கள் பதிவாகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு நெருங்குவதால் மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். கோவை - அவிநாசி சாலையில் அதிவேக பயணத்தை தடுப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.