

சென்னை: சென்னை, புளியந்தோப்பு சாஸ்திரி நகர், 13-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ் (49). வில்லிவாக்கம் பாரதியார் தெருவில் வசித்து வந்தார். இவர் மீது பல காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு உட்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவரது மனைவி விமலா. இவர் அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மதியம் சுரேஷ், தனது உறவினர் அப்பு (25) என்பவருடன் பாடி இளங்கோ நகரில் பணியில் இருக்கும் விமலாவை பார்க்க சென்றுள்ளார். இவர்கள் இருவரும் பாடி, வன்னியர்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு, இரண்டு பைக்குகளில் வந்த 5 பேர் சுரேஷை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிஓடினர். தடுக்க முயன்ற உறவினர் அப்புவுக்கும் வெட்டு விழுந்துள்ளது.
தகவல் அறிந்து, கொரட்டூர் போலீஸார் சம்பவ இடம் விரைந்து சுரேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கொலையாளிகளை பிடிக்க ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.