

சென்னை: திமுக பெண் கவுன்சிலரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க வழிப்பறி செய்யும்போது ரெயின்கோட் அணிந்து சென்று கைவரிசை காட்டியது தெரியவந்தது.
சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலர் திமுகவைச் சேர்ந்த சரஸ்வதி. இவர் கடந்த 10-ம் தேதி போர்நினைவுச் சின்னம் அருகேநடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மழை பெய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ரெயின் கோட் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், சரஸ்வதியின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர்.
இதை சற்றும் எதிர்பாராத கவுன்சிலர், அதிர்ச்சியில் நகையை பறிகொடுக்காமல் வழிப்பறி கொள்ளையர்களுடன் போராடினார். இருப்பினும் அவரால் நகையை காப்பாற்ற முடியவில்லை. மூன்றரை பவுன் தங்க செயினுடன் கொள்ளையர்கள் தப்பினர்.
அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி, இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், பெண் கவுன்சிலரிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ஜாபர் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அவரது கூட்டாளியான 17 வயது இளஞ்சிராறும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘அப்துல் ஜாபர் மீது 10-க்கும் மேற்பட்ட வழப்பறி வழக்குகள் உள்ளன. அவர் வியாசர்பாடியைச் சேர்ந்த தனது நண்பருடன் இணைந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்டவழப்பறியில் ஈடுபட்டுள்ளார். போலீஸார் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக ரெயின்கோட் அணிந்துள்ளார். தான் காதலிக்கும் பெண்ணுடன் ஆடம்பரமாக இருப்பதற்காக அப்துல் ஜாபர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்’ என்றனர்.