Published : 14 Dec 2022 04:03 AM
Last Updated : 14 Dec 2022 04:03 AM
கோவை: கோவை சரகத்துக்குட்பட்ட 721 கிராமங்களில், கஞ்சா புழக்கம் இல்லை எனக் கண்டறிந்து காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இளைஞர்களிடையே பெருகிவரும் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரால் தொடர் சோதனை நடத்துதல், கஞ்சா வியாபாரிகளை கைது செய்தல், அவர்களின் சொத்துகளை முடக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
காவல்துறையினர் வெளியிட்ட புள்ளிவிவரப்படி, கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் நடப்பாண்டு ஜனவரி முதல் தற்போது வரை 1,054 கஞ்சா வழக்குகள் பதிவாகியுள்ளன. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 1,420 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 1,012 கிலோ கஞ்சா பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. கைதானவர்களில் 22 பேரின் பிணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 19 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 308 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக ‘கஞ்சா புழக்கம் இல்லாத கிராமம்’ என்பதை இலக்காக கொண்டு காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, கோவை சரக டிஐஜி முத்துசாமி கூறும்போது, ‘‘நான்கு மாவட்டங்களிலும் கடந்த மூன்று மாதங்களாக ‘கஞ்சா புழக்கம் இல்லாத கிராமம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து, அந்த கிராமத்தில் கஞ்சா புழக்கம், விற்பனை முற்றிலும் இல்லை என அறிவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். குற்றங்களை குறைக்க இந்நடவடிக்கை உதவும். ஒவ்வொரு கிராமமாக அந்தந்த காவல்துறையினர் சோதனை நடத்தி கஞ்சா வியாபாரிகளை கைது செய்தல், பழைய கஞ்சா வியாபாரிகளின் நடவடிக்கைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல், கஞ்சா விற்க மாட்டோம் என எழுதி வாங்குதல், அதை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
பின்னர், அந்தந்த கிராமங்களின் ஊராட்சி தலைவர், பள்ளியின் தலைமை ஆசிரியர், ரோந்து செல்லும் காவலர் ஆகியோர் ஒரு குழுவாக சேர்ந்து கண்காணித்து கிராமத்தில் கஞ்சா விற்பனை முற்றிலும் இல்லை என உறுதியளிப்பர். இதையடுத்து, அந்த கிராமம், ‘கஞ்சா புழக்கம் இல்லாத கிராமம்’ என அறிவிக்கப்படும்’’ என்றார்.
மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர் கூறும்போது, ‘‘கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,211 கிராமங்களில் 721 கிராமங்கள் ‘கஞ்சா புழக்கம் இல்லாத கிராமம்’ என அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 88 கிராமங்கள் இவ்வாறு அறிவிக்கப்பட் டுள்ளன. இதற்கான அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப் பட்டுள்ளது. நகராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கஞ்சா இல்லாத மேற்கு மண்டலம் என்பதே எங்கள் இலக்கு,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT