

வேலூர்: வேலூரில் இரு சக்கர வாகன ஷோரூமில் போலி பில்கள் மூலம் 40 வாகனங்களை ரூ.70 லட்சத்துக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை வக்கீல் தெருவைச் சேர்ந்தவர் வேதாராம். இவர், வேலூர் சாயிநாதபுரம், காட்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன ஷோரூம் நடத்தி வருகிறார். காட்பாடியில் உள்ள விற்பனை நிலையத்தில் வேலூர் அடுத்த மோட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொற்செல்வன் (30), வேலூர் அல்லாபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (23), வடுகன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (29), தினேஷ்குமார் (33) ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உரிமையாளருக்கு தெரியாமல் 40 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளனர். அந்த பணத்தை நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்காமல் இவர்கள் பங்கிட்டு கொண்டுள்ளனர். அதேநேரம், வாக னங்களை வாங்கியவர்கள் தங்களது வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய முடியா மல் இருந்துள்ளனர். பலமுறை ஷோரூ முக்கு வந்து கேட்டபோது, ஏதாவது ஒரு காரணத்தை கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.
ஒரு சிலர் மட்டும் சாயிநாதபுரத்தில் உள்ள அலுவலகத்துக்கு சென்று விசாரித்துள்ளனர். இதை கேள்விப் பட்ட உரிமையாளர் வேதாராம், சந்தேகத்தின் பேரில் மேலாளர் ஒருவரை காட்பாடி விற்பனை நிலையத்தில் புதிதாக பணியமர்த்தி கணக்குகளை ஆய்வு செய்துள்ளார். அதில், 40 இரு சக்கர வாகனங்கள் அங்கு இல்லாமல் இருப்பதும், அவற்றை போலி பில்கள் மூலம் பொற்செல்வன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து ரூ.70 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அந்த 40 வாகனங் களும் விற்பனையாகாமல் இருப்ப தாகவே தலைமை அலுவலகத்துக்கு அவர்கள் கணக்கு காட்டி வந்துள்ளனர்.
இது குறித்து, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வேதாராம் புகார் அளித்தார். அதன்பேரில், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், பிரசாந்த், தினேஷ் ஆகியோரை நேற்று கைது செய்தார். மேலும், தலைமறைவாக உள்ள பொற்செல்வனை தேடி வருகின்றார்.