

சென்னை: போலி அடையாள அட்டையுடன் வந்து மத்திய அரசு அதிகாரி எனக்கூறி 13 பசு கன்றுளை கடத்திச் சென்ற இளம் பெண்ணிடமிருந்து, அந்த கன்றுகளை பத்திரமாக மீட்கபோலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மேல்அயனம்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்.உமாராணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘`நான் சென்னையில் உள்ள தனியார்ஸ்கேன் சென்டரில் பணிபுரிந்து கொண்டே, பசு மாடுகளையும், கன்றுகளையும் வாங்கி, வளர்த்து,அவற்றை விற்பனை செய்யும்தொழிலையும் மேற்கொண்டு வருகிறேன்.
கடந்த அக்.20-ம் தேதி எனது வீட்டுக்கு திருவேற்காடு போலீஸாருடன் வந்த தீபா லோஷினி என்பவர், தான் மத்திய அரசின் விலங்குகள் குற்றத் தடுப்பு அதிகாரி எனக்கூறிக் கொண்டு, எங்கள் வீட்டில் இருந்த 13 பசு கன்றுகளை அவிழ்த்துக் கொண்டு சென்றார். காரணம் கேட்டபோது அந்த கன்றுக்குட்டிகளை இறைச்சிக்காக வளர்ப்பதாக குற்றம் சாட்டினர்.
தவறு செய்யவில்லை: நான் அதுபோல எந்த தவறும் செய்யவி்ல்லை என்பதால் மறுநாள் திருவேற்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று என்னுடைய மாடுகளை விடுவிக்கும்படி கோரினேன். ஆனால் போலீஸார் நீதிமன்றத்துக்கு சென்று உத்தரவு பெற்று வரும்படி கூறினர். எனவே எனது பசுமாடுகளை மீட்டு என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.
போலிஅதிகாரி: இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி, தீபாலோஷினி மத்திய அரசு அதிகாரியே கிடையாது அவர் போலியான அடையாள அட்டையைக் காட்டி போலீஸார் துணையுடன் 13 பசு கன்றுகளை கடத்திச் சென்றுள்ளார் என வாதிட்டு அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்.
அதையடுத்து நீதிபதி, பசு கன்றுகளை கடத்திய இளம்பெண் மீது திருவேற்காடு போலீஸார் சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ஒருவாரத்துக்குள் மனுதாரரின் 13 பசுகன்றுகளை மீட்டு பத்திரமாக ஒப்படைக்க வேண்டும். போலீஸார் அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு அளித்தது எப்படி என்பது குறித்தும் காவல்துறை உயரதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.