

சேலம்: சேலம் அருகே தலைவாசலில் வீட்டில் இருந்த பணத்தை கரும்பு தோட்டத்தில் மறைத்து வைத்து விட்டு, ரூ.1 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய விவசாயியை போலீஸார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சார்வாய் புதூர் சாமியார் கிணறு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன் (45). இவர் மனைவி, தாயாருடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இவரது நண்பர், தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியைச் சேர்ந்த கணேசன். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மகன் கோபாலகிருஷ்ணன்.
இவர்கள் 2 பைகளில் ரூ.2 கோடி பணத்தை லோகநாதனிடம் கொடுத்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் படி கூறியுள்ளனர். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்றதாகவும், அப்போது வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பீரோவில் வைத்திருந்த ரூ.1 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாகவும் தலைவாசல் காவல் நிலையத்தில் லோகநாதன் புகார் அளித்தார்.
காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து லோகநாதன், கணேசன், கோபாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
தீவிர விசாரணையில், லோகநாதன் அருகேயுள்ள கரும்பு தோட்டத்தில் பணத்தை மண்ணில் புதைத்து வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கரும்பு தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.1 கோடியை மீட்டனர். ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன் கொடுத்த பணத்தை அபகரிக்கும் நோக்கத்தில் கரும்பு தோட்டத்துக்குள் பணத்தை மறைத்து வைத்து கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய லோகநாதனை போலீஸார் கைது செய்தனர்.