Last Updated : 09 Dec, 2022 03:49 PM

1  

Published : 09 Dec 2022 03:49 PM
Last Updated : 09 Dec 2022 03:49 PM

பட்டுக்கோட்டை - திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோயிலில் இரு ஐம்பொன் சிலைகள் திருட்டு

சிலைகள் திருடப்பட்ட கோயில்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதனவனேஸ்வரர் கோயிலில் இரண்டு ஐம்பொன் சிலைகளைத் திருடி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை பகுதியில் கோயில்களில் தொடர்ந்து சிலை திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் கோயில்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில், அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியநாயகி அம்பாள் சமேத புராதனவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கி.பி.7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதற்கான வரலாற்று ஆவணங்களும், கல்வெட்டுகளும் உள்ளன. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.

இக்கோயிலுக்கு செந்தமான ஐம்பொன் சிலைகள் திருவாரூர் உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த 2001-ம் ஆண்டு உபயதாரர்களால் ஐம்பொன்னால் நடராஜர், அம்பாள், சோமஸ்கந்தர் சிலைகள் வழங்கப்பட்டது. இந்த சிலைகள் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியில் வழிப்பாட்டுக்கு வைக்கப்பட்டு இருந்தது. இச்சிலைகள் அறநிலையத் துறை ஆவணங்களில் பதிவு செய்யாமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலை பயன்படுத்தி நேற்று இரவு கோயில் வலதுபுற சுற்றுசுவர் வழியாக உள்ள புகுந்த மர்ம நபர்கள், நடராஜர் சன்னதியில் இருந்த 4 அடி உயரம் கொண்ட அமர்ந்த நிலையிலான அம்மன், ஒரு அடி உயரம் கொண்ட சோமஸ்கந்தர் சிலையினை திருடிச் சென்றுள்ளனர். இதன் எடை சுமார் 40 கிலோவாகும். இதையடுத்து இன்று காலை (டிச.9) கோயில் பணியாளர்கள் கோயிலுக்கு வந்து பார்த்தபோது, சிலைகள் மாயமானது தெரியவந்தது.

திருட்டு போன ஐம்பொன் சிலைகள்

இதுகுறித்து அவர்கள் திருச்சிற்றம்பலம் போலீஸாருக்கும், அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த திருச்சிற்றம்பலம் போலீஸார் கோயிலை சோதனை செய்தனர். அப்போது, கோயிலில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா ஒயர்களை துண்டித்து விட்டு, சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

தொடர்ந்து அறநிலையத் துறை செயல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் அமுதா, பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பிரித்திவிராஜ் சவுக்கான் ஆகியோர் கோயில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீஸ் மோப்பநாய் டஃபி வரவழைக்கப்பட்டு கோயிலில் இருந்து கடைதெரு வரை சுமார் ஒரு கி.மீ தூரம் ஓடி சென்று யாரை பிடிக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர் அமலா, தடயங்களை சேகரித்தார். இச்சம்பவம் குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த மாதம் விளாங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில், புக்கரம்பை தான்தோன்றியம்மன் கோயிலில் இருந்து ஐம்பொன் சிலைகள் திருடு போனதால், கோயில்களில் தொடர்ந்து சிலை திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் கோயில்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x