

சென்னை: வங்கிகளில் ரூ. 4 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக கைதான சுரானா நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட சுரானாஇண்டஸ்ட்ரியல் நிறுவனம் மற்றும் சுரானா பவர் ஆகியவைஐடிபிஐ, எஸ்பிஐ ஆகிய வங்கிகளிடம் இருந்தும்,சுரானா கார்ப்பரேஷன் நிறுவனம் எஸ்பிஐ வங்கியிடம் இருந்தும் மொத்தம் ரூ.4 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்துவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சுரானா நிறுவனத்தின் இயக்குநர்களான தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா, நிறுவன ஊழியர்கள் பி.ஆனந்த், ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் சுரானா நிறுவன இயக்குநர்கள் 3 பேர் மற்றும் ஊழியர் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர மோசடி புலன் விசாரணை அமைப்பும் தனியாக வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சுரானா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான விஜயராஜ் சுரானா தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, `மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது' எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.