

மறைமலைநகர்: கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (21). கபடி வீரர். மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கிய ஜெர்சலின் (18) என்ற பெண்ணும் பணியாற்றி வந்தார்.
இருவரும், சிங்கப்பெருமாள் கோவில் அருகே, தனித்தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதால், இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியுள்ளது.
நேற்று முன்தினம் அலெக்ஸ்க்கு பிறந்த நாள் என்பதால் இருவரும் தண்டவாளத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். பின்னர் இருவரும் தண்டவாளம் ஓரம் இரவு 10:45 மணிக்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தற்செயலாக ரயில் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.
நேற்று காலை, தாம்பரம் ரயில்வே போலீஸார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது.