Published : 07 Dec 2022 07:19 AM
Last Updated : 07 Dec 2022 07:19 AM

களக்காடு அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மோதல்: 12 -ம் வகுப்பு மாணவருக்கு கத்திக்குத்து; மற்றொருவர் கைது

களக்காட்டிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் கத்தியால்குத்தப்பட்டதை அடுத்து அங்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 12-ம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களக்காட்டிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். இங்கு தலைமையாசிரியர் உட்பட 48 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இப்பள்ளியில் சமீபகாலமாக மாணவர்களுக்குள் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வந்துள்ளது.

இப்பள்ளியில் களக்காடு அருகே உள்ள ஊரைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 12-ம் வகுப்பு பொறியியல் பிரிவில் படித்து வருகிறார். அதே பிரிவில் களக்காடு பகுதியைச் சேர்ந்த மற்றொரு மாணவரும் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் பயிலும் வகுப்பில் ஒரு மாணவரது புத்தகம் மாயமாகியுள்ளது. அந்த புத்தகத்தை தேடியபோது, அது மற்றொரு மாணவரின் பையில் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் பள்ளி வளாகத்தில் 12-ம் வகுப்பு பொறியியல் பிரிவு மாணவர் நேற்று உணவருந்திவிட்டு கைகழுவிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த களக்காடு மாணவருக்கும், அவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், பொறியியல் பிரிவு மாணவர் முதுகில் கத்தியால் குத்தப்பட்டார். இதில் காயமடைந்த அவர் அலறினார்.

சக மாணவர்கள் இதுகுறித்து தலைமையாசிரியர் ராஜேஷ் பெல்மேனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் காயமடைந்த மாணவரை களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாங்குநேரி ஏஎஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமையில் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீஸார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். சக மாணவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அரசு பள்ளியில் மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் களக்காடு பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x