Published : 06 Dec 2022 04:10 AM
Last Updated : 06 Dec 2022 04:10 AM

வீட்டில் இருந்தவாறு வேலைவாய்ப்பு - மோசடி கும்பல் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் எச்சரிக்கை

ஈரோடு: வீட்டில் இருந்தவாறு வேலை வாய்ப்பு எனக்கூறி, வங்கிக்கணக்கு, ஆதார் எண் விவரங்களைக் கோரும் மோசடிகும்பலிடம் சிக்கிக் கொள்ள வேண்டாம் என ஈரோடு சைபர் க்ரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த இளைஞர், சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரில், நான் செல்போன் செயலி மூலம், எனது ஆதார் எண், புகைப்படம் ஆகியவற்றைக் கொடுத்து ரூ.3,500 கடன் பெற்றேன். 7 நாட்களுக்குள் ரூ.5000-த்தை திருப்பிச் செலுத்தி விட்டேன். இருப்பினும், மேலும் பணம் செலுத்தாவிட்டால், உங்கள் புகைப்படத்தை மார்பிங் செய்து, உங்கள் செல்போன் தொடர்பில் உள்ளவர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டுவதாக’ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், செல்போன் செயலி மூலம் பெற்ற கடன், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த கணக்கிற்கு சொந்தக்காரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது

வீட்டில் இருந்தபடி பகுதி நேர வேலைவாய்ப்பு, நல்ல சம்பளம் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, அவர்களை தொடர்பு கொண்டேன். மறுமுனையில் பேசிய பெண் ஒருவர், ‘நாங்கள் செல்போன் செயலி மூலம் கடன் கொடுத்து வருகிறோம். நாங்கள் அதிக அளவில் கடன் கொடுப்பதால் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, நீங்கள் உங்களது பெயர், ஆதார் எண், போட்டோ மற்றும் வங்கிக் கணக்கு எண் கொடுத்தால், எங்களுக்கு வரும் பணம், உங்களுக்கு கமிஷனாக கிடைக்கும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் கேட்ட தகவல்களை அனுப்பி வைத்தேன். இதனைத் தொடர்ந்து என் வங்கிக்கணக்கிற்கு ரூ.1,000 பணம் வந்தது. மேலும், எனது இரு வங்கிக் கணக்குகள், எனது தம்பி, தந்தை மற்றும் நண்பர்கள் சிலரின் வங்கிக் கணக்குகள் மற்றும் விவரங்களையும் பெற்று அவர்களுக்குத் தெரிவித்தேன்.

மேலும், இந்த வங்கிக்கணக்குகள் தொடர்பாக, எங்களது செல்போனுக்கு வரும் ஓடிபிக்களை, அவர்கள் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், எங்களுக்கு எந்த ஓ.டி.பி. வந்தாலும், அதனைக் கொண்டு, எங்கள் வங்கிக் கணக்கில் கட்டப்படும் பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். எங்களுக்கு அவ்வப்போது, ரூ.1,000 கமிஷனாக தருவார்கள். அவர்கள் யார், எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் எங்களுக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து செல்போன் செயலி மூலம் கடன் வழங்கி, அவர்களை மிரட்டி, பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார் என ஈரோடு சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்தவாறு வேலை வாய்ப்பு என ஆசைவார்த்தை கூறி, வங்கிக் கணக்கு, ஆதார் எண்களைக் கேட்டால், அதனை பொதுமக்கள் வழங்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x