Published : 06 Dec 2022 06:08 AM
Last Updated : 06 Dec 2022 06:08 AM

தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து - அடுத்தடுத்து 12 பேரிடம் செயின் பறிப்பு: பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது

செயின் பறிப்பில் ஈடுபட்ட மணிகண்டன், மோகன், கவியரசன்.

சென்னை: தனியாக நடந்து செல்பவர்களை குறி வைத்து, திருட்டு பைக்கில் சென்று அடுத்தடுத்து 12 பேரிடம் செயின் பறித்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூர், யுனைடெட் காலனியைச் சேர்ந்தவர் நாகராணி (44). இவர் கடந்த 1-ம் தேதி மாலை கொளத்தூர், திருப்பதி நகர் விரிவு, ஜவஹர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நாகராணி அணிந்திருந்த தங்கச் செயினை பறித்து தப்பினர். இதுகுறித்து கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்டமாக சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துஅதன் அடிப்படையில் துப்பு துலக்கினர். இதில் நாகராணியிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டை மணிகண்டன் என்ற மணி (26), அதே பகுதி மோகன் (30), திருவொற்றியூர் கவியரசன் (25) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட கவியரசன், ஆள்நடமாட்டம் இல்லாத தெருக்களில் நோட்டமிட்டு தனியாக நடந்துசெல்லும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பார். மணிகண்டன் மற்றும் மோகன் ஆகியோர் உடனே இருசக்கர வாகனத்தில் சென்று தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் செயின் பறிப்பில் ஈடுபடுவர். இவ்வாறு இவர்கள் மாதவரம், ராஜமங்கலம், ஜெ.ஜெ.நகர், திருமங்கலம் ஆகிய காவல் நிலைய எல்லைபகுதிகளில் சுமார் 12 செயின் பறிப்பு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும், செயின் பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை ஐசிஎப்பகுதியில் திருடியதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடமிருந்தும் 43.5 பவுன் தங்க நகைகள் மற்றும் குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x