சென்னை | வாகன சோதனையின்போது மது போதையில் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதாக பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது

சென்னை | வாகன சோதனையின்போது மது போதையில் போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதாக பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை நிறுத்தினர். காரை ஓட்டிய பெண்ணும், அவருடன் வந்த ஆண் நண்பரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அப்பெண்ணிடம் ‘பிரித்திங் அனலைசர்’ கருவியை வைத்து ஊத அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த அப்பெண் திடீரென்றுதலைமைக் காவலர் ராமமூர்த்தியின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அங்கு இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் அங்கு வந்த சிலர் அந்த பெண்ணுக்கு ஆதரவாக போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இருவரும் அங்கிருந்து காரில் புறப்பட்டு நழுவிச் சென்றனர்.

தாக்குதல் தொடர்பாக உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தலைமைக் காவலரை தாக்கியது நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன அதிகாரி ஷெரின் பானு (48), மும்பையை சேர்ந்த விமான நிலைய ஊழியரான விக்னேஷ் (30) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in