லூடோ விளையாட்டில் தன்னையே பந்தயமாக கட்டி தோற்ற பெண்: உ.பி.யில் போலீஸ் விசாரணை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

பிரதாப்கர்: உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் லூடோ விளையாட்டுக்கு அடிமை ஆகியுள்ளார். அதுவும் அவர் பணம் வைத்து சூது ஆடுவது வழக்கம் எனத் தெரிகிறது. இந்த நிலையில், சூது வைத்து லூடோ விளையாடியதால் கையில் இருந்த பணத்தை முழுவதுமாக அவர் இழந்துள்ளார். அதனால் அவர் தன்னையே பந்தயமாக கட்டி விளையாடியுள்ளார். அந்தப் போட்டியில் நிலக்கிழார் ஒருவரிடம் அவர் தோல்வியை தழுவியுள்ளார்.

இந்தச் சம்பவம் நாகர் கோட்வாலியில் உள்ள தேவ்கலி பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர், காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் பெண்ணின் பெயர் ரேணு என தெரிவிக்கப்பட்டுள்ளது. லூடோ விளையாட்டுக்கு அடிமையான அவர், பணம் வைத்து விளையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதற்காக அவரது கணவர் ராஜஸ்தானில் இருந்து வேலை செய்து அனுப்பிய பணத்தை பயன்படுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் கையில் இருந்த மொத்த தொகையையும் அவர் இழந்துள்ளார். அதனால், தன்னையே பந்தயமாக கட்டியுள்ளார். வழக்கமாக அவர் அந்தப் பகுதியில் உள்ள நிலக்கிழார் ஒருவருடன்தான் விளையாடுவாராம்.

இந்தப் பந்தயத்தில் தோல்வியை தழுவிய பிறகு, நடந்ததை கணவரிடம் போன் மூலம் ரேணு தெரிவித்துள்ளார். அதையடுத்து அவரது கணவர் பிரதாப்கருக்கு வந்து காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அதோடு சமூக வலைதளத்திலும் இது குறித்து பகிர்ந்துள்ளார்.

தானும், தனது மனைவியும் வாடகை வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்ததாகவும். ஆறு மாதங்களுக்கு முன்னர் ஜெய்ப்பூர் நகரில் வேலை கிடைத்து தான் சென்றதாகவும். அங்கு கிடைத்த பணத்தை மனைவிக்கு அனுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் கையில் இருந்த பணம் கரைந்து போன காரணத்தால் இந்த விபரீத முடிவை தனது மனைவி எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது தன் மனைவி, அந்த நிலக்கீழார் உடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ள முயன்று வருவதாகவும், விரைவில் விசாரணையை துவங்க உள்ளதாவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

லூடோ: கரோனா ஊரடங்கு நேரத்தில் இந்திய அளவில் அதிகம் விளையாடப்பட்ட மொபைல் கேம்களில் லூடோ விளையாட்டுக்கு முதல் இடத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது. தனியாகவும், குழுவாகவும் விளையாடும் விளையாட்டு இது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in