

திருப்பூர்: காங்கேயம் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் தனது குடும்பத்தினருடன் காங்கேயத்தில் இருந்து சென்னிமலையில் உள்ள தனது உறவினர் இல்ல நிகழ்வில் கலந்துகொள்ள சான்ட்ரோ காரில் சென்றுள்ளனர். இதனிடையே, சென்னிமலையிலிருந்து காங்கேயம் நோக்கி வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி காங்கேயம் அடுத்த சிவியார்பாளையம் அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விஸ்வநாதன் ஒட்டி வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த விஸ்வநாதன் மற்றும் அவரது மாமியார் மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணம் செய்த ரமணன் மற்றும் உமாபதி ஆகியோர் படுகாயங்களுடன் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் ரமணன் உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக உமாபதி அங்கிருந்து கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காங்கேயம் அருகே டேங்கர் லாரி கார் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.