Published : 05 Dec 2022 04:20 AM
Last Updated : 05 Dec 2022 04:20 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் சிறப்பு காவல் படை செயல்பட்டு வருகிறது. இங்கு தளவாய் ஆக பணிபுரியும் காவல் அதிகாரியின் செல்போனில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாட்ஸப் மூலம் குறுந்தகவல் வந்துள்ளது. அதன் மூலம் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.7.50 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் ராஜ், சந்திரமோகன், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி இந்த மோசடியில் தொடர்புடைய ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த முரளி (41), வினய்குமார் (35) ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், பஞ்சாப் மாநிலத்திலும் இதேபோல் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. அந்த வழக்கில் கிடைத்த தகவல்கள் மற்றும் ஆவணங்களைக் கொண்டு போலீஸார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தினர்.
இதில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராம்சன் சோகாசர் (32), நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஸ்டான்லி (40) ஆகியோர் பெங்களூருவில் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூருக்கு விரைந்த தனிப்படை போலீஸார் ராம்சன் சோகாசர், ஸ்டான்லி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், ஏடிஎம் கார்டுகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT