

திருச்சி: மணிகண்டத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மர அறுவை மில் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி சஞ்சீவி நகர் ஏ.ஆர்.கே நகரைச் சேர்ந்தவர் திரேந்தர்(42). இவர், மணிகண்டம் பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகிறார். துவாக்குடி வாண்டையார் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் சக்கரவர்த்தி(33), நேற்று முன்தினம் இரவு மர அறுவை மில்லுக்குள் சென்றுள்ளார். அப்போது, திருட வந்தவர் என எண்ணி அறுவை மில்லில் இருந்தவர்கள் சக்கரவர்த்தியைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தாக்கினர்.
இதில், சக்கரவர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர்கள் சந்திரமோகன், கமலவேணி ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, திரேந்தர், மர அறுவை மில் தொழிலாளர்களான அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பஸில் ஹக்(36), முஷிதுல் ஹக்(28) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.