ஆஸ்திரேலியா | அதிர்வலைகளை எழுப்பிய போட்காஸ்ட்: 40 ஆண்டுகால கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

சிட்னி: ஆஸ்திரேலிய நாட்டில் 40 ஆண்டுகால மர்மம் நிறைந்த கொலை வழக்கு ஒன்றில் புதிய கோணத்தில் விசாரணையை மேற்கொள்ள போட்காஸ்ட் (Podcast) தொடர் உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பேசப்பட்ட இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த குற்ற செயலை செய்த நபருக்கு இப்போது தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 1982 வாக்கில் தனது மனைவி லினெட் டாசனை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரும், உயர்நிலைப்பள்ளி ஆசிரியருமான கிறிஸ் டாசனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம். தற்போது அவருக்கு 74 வயது ஆகிறது.

40 ஆண்டுகளுக்கு முன்னர் தனது மனைவி காணவில்லை என காணாமல் போன ஆறு வார காலத்திற்கு பிறகு புகார் கொடுத்துள்ளார் டாசன். பின்னர் அது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், கொலையாளி ஒருவராக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை டாசன் செய்தார் என்பதற்கான போதிய சாட்சியம் இல்லாமல் இருந்துள்ளது. அவரது வீட்டை போலீசார் முழுவதுமாக சோதித்தும் துப்பு கிடைக்கவில்லை. அதனால் இந்த வழக்கு முடித்து வைக்கப்படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து ‘தி டீச்சர்ஸ் பெட்’ எனும் க்ரைம் போட்காஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய நாட்டின் பிரபல பத்திரிகை நிறுவனமான நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா (தி ஆஸ்திரேலியன்) தயாரித்துள்ளது. கடந்த மே, 2018 முதல் ஏப்ரல் 2019 வரையில் 17 அத்தியாயங்களாக வெளியாகியுள்ளது இந்த தொடர். இதனை பத்திரிகையாளர் ஹெட்லி தாமஸ் தொகுத்துள்ளார். கிப்சன் போட்காஸ்ட் தயாரிப்பு பணிகளில் உதவியுள்ளார். ஆஸ்திரேலியா மட்டுமல்லாது பிரிட்டன், கனடா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் இந்த போட்காஸ்ட் மக்களின் கவனத்தை பெற்றது.

இதில் டாசன் மற்றும் லினெட் தம்பதியரின் காதல், திருமணம், டாசன் மற்றும் 16 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவு, மாயமான லினெட், அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் நிகழ்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றை இந்த போட்காஸ்ட் விவரித்தது.

முக்கியமாக சில செய்தி அறிக்கையின் அடிப்படையில் லினெட், தன் வீட்டில் இருந்து நகையோ, சூட்கேஸோ எடுக்காமல் சென்றுள்ளார் என்பது குறித்தும் போட்காஸ்டில் விவரிக்கப்பட்டது. மேலும், அவர் தனது கான்டாக்ட் லென்ஸை கூட எடுக்காமல், சில துணிகளை மட்டுமே எடுத்து சென்றுள்ளார் என சொல்லப்பட்டது.

இதையெல்லாம் அடிப்படையாக வைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விசாரணையை மீண்டும் தொடங்கியதில் சென்ற ஆகஸ்ட் வாக்கில் 16 வயது பெண்ணை அடையும் நோக்கில் தன் மனைவியை டாசன் கொலை செய்த குற்றம் நிரூபணமானது. அந்த பெண்ணை அவர் இரண்டாவதாக 1984 வாக்கில் திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக இப்போது அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டாசனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த வழக்கு இன்னும் முடியவில்லை. ஏனெனில் இதுவரை லினெட் உடல் கண்டெடுக்கப்படவில்லை என இந்த வழக்கில் போலீசாருக்கு உதவிய துப்பறிவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in