Published : 04 Dec 2022 04:30 AM
Last Updated : 04 Dec 2022 04:30 AM
ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு பேருந்தில் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 5 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், ராமநாதபுரம் மாவட்ட கடல் வழியாக கடத்தி வரப்பட்டு, நேற்று முன்தினம் இரவு அரசு பேருந்தில் மதுரைக்கு தங்கம் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, மதுரை சுற்றுச் சாலையில் அரசு பேருந்தை நிறுத்தி, அதில் பயணித்த ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த கலீல் ரஹ்மான் என்பவரை பிடித்து சோதனையிட்டதில் அவரிடம் இருந்த 5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில், அவரது தம்பி நூருல் அமீனுக்கும் தங்கக் கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவே மண்டபம் மரைக்காயர் பட்டினத்தில் உள்ள நூருல் அமீன் வீட்டுக்கு அதிகாரிகள் சென்றபோது, நூருல் அமீன் தப்பிவிட்டார்.
அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வருவாய்த் துறையினர் உதவியுடன் சோதனை நடத்தி, வீட்டின் ஒரு அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சத்தை கைப்பற்றினர். தலைமறைவான அமீனை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT