

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் தில்லைவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மனைவி பாலசுந்தரி(40). இவர், நவ.29-ம் தேதி அன்று உடல்நலம் சரியில்லை எனக் கூறி நாச்சிக்குளத்தில் கிளினிக் நடத்தி வரும் ஹோமியோபதி மருத்துவரான முகைதீன் அப்துல் காதர் என்பவரிடம் சிகிச்சைக்காக சென்றார். அப்போது, பாலசுந்தரிக்கு முகைதீன் அப்துல் காதர் ஊசி போட்டு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், முகைதீன் அப்துல் காதரை நேற்று முன்தினம் தொடர்புகொண்ட பாலசுந்தரியின் உறவினர்கள் வீரசேகரன்(42), முகேஷ்(35) ஆகியோர், பாலசுந்தரிக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறியதுடன், இதை மறைப்பதற்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் ரூ.2.50 லட்சத்தை 2 தவணைகளாக முகைதீன் அப்துல் காதர் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, பாலசுந்தரி உயிருடன்தான் இருக்கிறார் என்ற தகவலை அறிந்த முகைதீன் அப்துல் காதர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து, இதுதொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் வீரசேகரன், முகேஷ், பாலசுந்தரி ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வீரசேகரன், முகேஷ் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர்.