Published : 03 Dec 2022 04:23 AM
Last Updated : 03 Dec 2022 04:23 AM

தமிழகத்தில் 45,000 இணையவழி குற்ற வழக்குகள் பதிவு: காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு தகவல்

தமிழகத்தில் முதல் முறையாக ரூ.56 லட்சம் மதிப்பில் அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நடமாடும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அருகில், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: தமிழகத்தில் இணையவழி குற்றங்கள் தொடர்பாக 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

வேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சாலை பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில், தமிழகத்தில் முதல் முறையாக ரூ.56 லட்சம் மதிப்பில் அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட நடமாடும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனம் காவல் துறையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வாகனத்தை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஒப்படைத்தார். அப்போது, வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘இந்த நடமாடும் வாகனத்தில் மொத்தம் 6 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் மூலம் கூட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்’’ என்றார்.

பின்னர், டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்த வாகனத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமரா 360 டிகிரி சுழலும் தன்மை கொண்டது. காவல் துறையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் நவீன செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த மென்பொருள் இந்த வாகனத்தில் இருக்கும். ஒரு குற்றவாளி இந்த வாகனத்தின் கேமரா கண்காணிப்புக்குள் வந்துவிட்டால் அவர் குறித்த விவரங்கள் முழுவதும் தெரிந்துவிடும். இந்த வாகனம் திருவண்ணாமலை மகா தீப விழாவிலும் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த வாகனத்தில் குற்றவாளி களை அடையாளம் காணும் மென்பொருள், வாகன பதிவெண் கண்காணிக்கும் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. தமிழக காவல் துறை கணினி வழி குற்றங்கள் விசாரணை உள்ளிட்டவற்றில் எல்லா முன்னணி மாநிலங்களுக்கு இணையாகவும், சில விஷயங்களில் அதைவிட சிறப்பாகவும் செயல்படுகிறோம்.

நம்மிடம் இருக்கும் எல்லா கருவிகளும் நவீன மயமானது. போதைப் பொருட்கள், கணினி வழி குற்றங்கள், ஆன்லைன் ரம்மி விளையாடுவதை தவிர்க்க பொதுமக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மின் இணைப்பு, ஏ.டி.எம். ரகசிய எண் கோருவது உள்ளிட்ட இணையவழி குற்றங்கள் தொடர்பாக 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

அதி நவீன வாகனம்: வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக ரூ.12.56 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக 937 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.

இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு மற்றொரு அறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், வேலூர் வடக்கு, சத்துவாச்சாரி, தெற்கு, பாகாயம் காவல் நிலையத்திலும் அமைக்கப்படும். ‘ஸ்மார்ட் சிட்டி’ பாதுகாப்பு அம்சத்தில் இந்த அதி நவீன நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ். வசதி கொண்ட இந்த வாகனத்தில் 2 கணினி, 1 லேப்டாப், 56 அங்குலம் டி.வி., 360 டிகிரி சுழன்று 2 கி.மீ. தொலைவு வரை துல்லியமாக படம் பிடிக்கும் டூம் கேமரா உள்ளிட்ட அதிக திறன் கொண்ட 3 கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன. ஒரு ட்ரோன் கேமரா, ஜெனரேட்டர் வசதி, 5ஜி ஃவைபை வசதியும் கொண்டிருக்கிறது. இந்த வாகனம் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரி வித்தனர். இந்த வாகனம் குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x