

சென்னை: சென்னையில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். சென்னையில் குட்கா உள்ளிட்ட போதையூட்டும் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சூளையில் சில கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவு பாதுகாப்புத் துறை நியமனஅதிகாரி சதீஷ்குமார் உத்தரவின் பேரில், தனி குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில் 3 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதையூட்டும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த 3 கடைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. கடையின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள மற்ற கடைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘குட்கா, மாவா உள்ளிட்ட போதையூட்டும் பொருட்களை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய தவறுகளில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிந்தால் 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சோதனைகளை நடத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.