Published : 02 Dec 2022 04:10 AM
Last Updated : 02 Dec 2022 04:10 AM
பெரியகுளம்: தேனி மக்களவை உறுப்பினர் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டியன் தன்னை மிரட்டி, அடித்துத் துன்புறுத்தி வழக்கில் சேர்த்ததாகவும் இது குறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம் கோம்பை மலையடிவாரத்தில் மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. செப்.28-ம் தேதி இங்குள்ள மின்வேலியில் சிக்கி சிறுத்தை இறந்து கிடந்தது. இதனை அவசரஅவசரமாக பிரேதப் பரிசோதனை செய்து அப்பகுதியில் புதைத்த வனத் துறையினர் மறுநாளே இத்தகவலை தெரிவித்தனர். இது வனஉயிரின ஆர்வலர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அத்தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன்(36) என்பவரை வனத் துறையினர் கைது செய்தனர்.
தோட்ட உரிமையாளர் மீதுநடவடிக்கை எடுக்காமல் தற்காலிகமாக ஆட்டுக்கிடை அமைத்திருந்தவரை கைது செய்ததுக்கு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்புச் சங்கம் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து தோட்டமேலாளர்கள் ராஜவேல் தங்கவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டியனுக்கு தேனி நீதிமன்றம் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நேற்று விடுதலையான பின் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: செப்.29-ம் தேதி தேனி வனச்சரக அலுவலகத்துக்கு வனத் துறையினர் என்னை அழைத்தனர். அங்கே சென்றபோது வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனவர் ஆனந்த்பிரபு மற்றும் நான்கு வனக் காவலர்கள் சிறுத்தையை நான் கொன்றதாக எழுதிக் கேட்டனர். மறுக்கவே என்னை முதுகிலும், கன்னத்திலும் பலமாகத் தாக்கி துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டினர். இதனால், உயிர் பயத்தில் அவர்கள் சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டேன்.
எனக்கு வந்த மிரட்டல் போனை ஆடியோவாக பதிவு செய்து கால்நடை வளர்ப்போர் சங்கத் தலைவர் கிருஷ்ணனுக்கு அனுப்பினேன். மறுபடியும் என்னை அழைத்துச் சென்ற வனத் துறையினர் துன்புறுத்தி என்னை சிறையில் அடைத்துவிட்டனர். இது குறித்து தென்கரை காவல்நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
கால்நடை வளர்ப்போர் பாதுகாப்புச் சங்கத்தின் வழக்கறிஞர் சத்தியம் சரவணன் கூறுகையில், ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தும் ஏழைத் தொழிலாளியை மிரட்டி இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் முறையீடு செய்ய உள்ளோம். தமிழக முதல்வர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT