Published : 02 Dec 2022 04:15 AM
Last Updated : 02 Dec 2022 04:15 AM

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.51 லட்சம் மோசடி: விழுப்புரத்தில் காவல் ஆய்வாளர் கைது

விழுப்புரம்: கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் அருகே சூசைபுரம், காக்கவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை(58). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த 2020-ம் ஆண்டு தன்னுடைய மகனுக்கு வேலை தேடிக் கொண்டிருந்தார்.

இது பற்றி செல்லதுரை தனது நண்பரான டேவிட்சனிடமும் கூறினார். அவர் தனது நண்பரான விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றும் குமரய்யா(50) என்பவரை அறிமுகப்படுத்தி, அவர் அரசு வேலை வாங்கித் தருவார் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, செல்லத் துரையை போனில் அணுகிய குமரய்யா, அவரது மகனுக்கு ஆவின் நிறுவனத்தில் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு பணம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய செல்லத்துரை, அவரிடம் ரூ.31 லட்சத்தை கொடுத்தார். இதேபோல் கன்னியாகு மரியைச் சேர்ந்த கணேசன், ஸ்டெல்லா மேரி, பிராங்கிளின் ராஜேஷ், ஜெரிஷ்பெனிலா ஆகியோரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி குமரய்யா ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டார்.

ஆனால் அவர் குறிப்பிட்டதுபோல, அவர்களுக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2021-ல் விழுப்புரம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாதாவிடம் இதுபற்றி புகார் தெரிவித்தனர். இதையடுத்து, குமரய்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று குமரய்யா மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் மாலை அவரை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x