

புதுச்சேரி: புதுச்சேரி சின்னையாபுரம் அக்கா சுவாமிகள் மடம் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் உருளையன்பேட்டை பகுதியில் உள்ள கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு, இவருக்கு சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த ரமா(எ) மகாலட்சுமி (55), அவரது மகன் சபரி (31) ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர்.
அவர்கள், தங்களை தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தில் பணிபுரிவதாகக் கூறியுள்ளனர். வீடு கட்டுவதற்கு ரூ.1.50 கோடி கடனாக பெற்றுத் தருவதாகவும், 6 மாதம் கழித்து அரசே கடனை தள்ளுபடி செய்துவிடும் எனவும்கூறியுள்ளனர். இதற்கான அனுமதி பெறுவதற்காக கிருஷ்ணன், பல தவணைகளில் ரூ.2.50 கோடி வரை அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட ரமாவும், அவரது மகன் சபரியும், கடன் பெற்றுத்தரவில்லை. பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் திருவான்மியூர் பகுதியில் பதுங்கியிருப்பது சிபிசிஐடி போலீஸாருக்கு தெரியவந்துள்ளது.
அங்கு சென்ற போலீஸார் நேற்று முன்தினம் , தாய், மகன் இருவரையும் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.