

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே பழவூர் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். விஸ்வநாதபுரம்- கூடங்குளம் சாலையில் வேகமாக சென்ற டெம்போவை மறித்தபோது, அது நிற்காமல் சென்றது.
பார்த்திபன் தலைமையிலான போலீஸார் அந்த டெம்போவை விரட்டிச் சென்று மடக்கினர். டெம்போவில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. அதிலிருந்த இருவரை பிடித்து போலீஸார் விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது பார்த்திபனை அரிவாளால் வெட்டிவிட்டு, காவலர் கார்த்தீசன் என்பவரையும் தாக்கிவிட்டு சண்முகபுரத்தைச் சேர்ந்த சங்கர் (28) என்பவர் தப்பியோட முயற்சித்தார்.
அவரை அங்கிருந்த போலீஸார் மடக்கிபிடித்து அரிவாளை பறிமுதல் செய்தனர். சங்கரையும், அவரது சகோதரர் மணிகண்டனையும் (25) கைது செய்தனர்.காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.