

சென்னை: கோவையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கார் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் அண்மையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் தீவிரவாத செயல்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்து நிறுத்த சிறப்பு பிரிவை உருவாக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்கும் பணியை தற்போது வேகப்படுத்தி உள்ளனர். ஆந்திரா, மகாராஷ்டிரா உள்பட 4 மாநிலங்களில் இப்பிரிவு போலீஸார் செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து தமிழக போலீஸார் அம்மாநிலம் சென்று அப்பிரிவு போலீஸாரின் செயல்பாட்டை அறிந்து கொண்டனர்.
இதையடுத்து தமிழகத்தில் தீவிரவாத செயல்களை தடுக்கும் வகையில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.