

சென்னை: சென்னை மாதவரம், பொன்னியம்மன் மேடு பகுதியில் இஸ்லாமிய மதரஸா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியை பிஹாரை சேர்ந்த அக்தர் என்பவர்நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் இப்பள்ளியில் படித்து வரும்குழந்தைகளை பள்ளி நிர்வாகிகள் சிலர் அடித்து துன்புறுத்துவதாக தகவல் வெளியானது. இதையடுத்து சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், குழந்தைகள் தாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தினரோடு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த 12 குழந்தைகளை மீட்டனர். பின்னர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைகள் அனைவரையும் ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘பிஹாரில் அரபிக் வகுப்புகள் நடத்துவதற்கு போதிய வசதி இல்லாததால், அம்மாநில குழந்தைகள் சிலர் இந்த மதரஸா பள்ளியில் தங்கி அரபி வகுப்புகள் படித்து வருகின்றனர். சரியாக படிக்காத குழந்தைகள், சொல் பேச்சு கேட்காத குழந்தைகளை நிர்வாகிகள் துன்புறுத்தி உள்ளனர். இதில் சில குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
இதையடுத்து, பள்ளி நிர்வாகிகள் அக்தர், அப்துல்லா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பள்ளி மீதும், நிர்வாகிகள் மீதும் வேறு ஏதேனும் குற்றச்சாட்டுகள் உள்ளதா எனவும் விசாரிக்கின்றனர்.