Published : 30 Nov 2022 07:10 AM
Last Updated : 30 Nov 2022 07:10 AM

சென்னை | போலீஸ் எனக்கூறி காதல் ஜோடியை மிரட்டி 3 ஆண்டுகளாக பணம் பறித்தவர் கைது

சதிஷ்குமார்

சென்னை: மெரினாவில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை செல்போனில் படம் பிடித்து 3 ஆண்டுகளாக மிரட்டி பணம் பறித்து வந்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். 2019 டிசம்பர் 6-ம் தேதி அவர் தனது அலுவலகத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவருடன் மெரினா கடற்கரை சென்றார். அங்கு இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கு வந்த 40 வயதுடைய ஆண் ஒருவர் தன்னை போலீஸ் என்று கூறி, இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்தார். பின்னர் அந்த புகைப்படத்தைக் காண்பித்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பணத்தைப் பறித்துச் சென்றார். தேவைப்பட்டால் அழைக்கும்போது காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறி அப்பெண்ணின் செல்போன் எண்ணையும் பெற்றுச் சென்றார்.

போலீஸ் எனக் கூறியவர் அவ்வப்போது அந்த பெண்ணை போனில் மிரட்டி கொஞ்சம் கொஞ்சமாக இதுவரையில் ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் வரை பணம் பறித்துள்ளார். மேலும், பணம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து மெரினா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில், போலீஸ் என கூறி மிரட்டி பணம் பறித்தது மணலி, மாத்தூர் எம்எம்டிஏ பகுதியைச் சேர்ந்த சதிஷ்குமார் (40) என்பதும், அவர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருவதும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x