

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசர் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் இரு பிரிவுகளில் படாளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு செங்கல்பட்டு சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் முனியாண்டி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
குற்றவாளிக்கு ஆட்கடத்தல் பிரிவில் 7 ஆண்டுகளும், பாலியல் வன்புணர்வு குற்றத்துக்கு 10 ஆண்டுகளும் என 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார்.
அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ 2 லட்சம் அரசால் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.