நாமக்கல்லில் வீடுகளில் புகுந்து நகை பறிப்பு: முகமூடி கொள்ளையர்களால் மக்கள் அச்சம்

நாமக்கல்லில் வீடுகளில் புகுந்து நகை பறிப்பு: முகமூடி கொள்ளையர்களால் மக்கள் அச்சம்
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல்லில் இரு வீடுகளில் புகுந்து பெண்களை மிரட்டி நான்கரை பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி அணிந்த கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் போதுப்பட்டி சரவணா நகர், லட்சுமி நகரில் உள்ள இரு வீடுகளில் கடந்த 13-ம் தேதி இரவு புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீட்டில் உறங்கி கொண்டிருந்த பெண்களை மிரட்டி நான்கரை பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நாமக்கல் சேலம் சாலையில் உள்ள சாய் பிருந்தாவன் நகரில் கடந்த 26-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் பூட்டியிருந்த இரு வீடுகளின் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கையில் அரிவாளுடன் வீட்டுக்குள் நுழைந்து, சிறிது நேரத்தில் வெளியே வரும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

மேலும், இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, போலீஸார் நடத்திய விசாரணையில், முகமூடி அணிந்த கொள்ளையர்கள் புகுந்த இரு வீடுகளிலும் நகை உள்ளிட்ட பொருட்கள் இல்லாததால் திருட்டு நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது.

அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விரு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாக இருக்க வாய்ப்புள்ளது என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும், தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in